“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்.. என, எங்களை விமர்சிக்கின்ற சொலவடை உண்டு. கருவறையில் உள்ள மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு, பூஜை பணியில் ஈடுபடும்போது சில நேரங்களில் நாங்கள் மறைத்து நிற்பது பிடிக்காதுதான். பெரும்பாலோருக்கு, அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மீதான பார்வை மாறுபட்டதாகவே இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் உள்ள தொடர்பு பூஜை நேரங்களில் தட்டில் பணம் வைப்பதோடு முடிந்துவிடுகிறது.
ஊரடங்கு உத்தரவால், தற்போது பல கோவில்கள் பூட்டப்பட்டுவிட்டன. பெரிய கோவில்களில் பூஜைகள் நடந்தாலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சகல வசதிகளோடு, பாரம்பரிய செழிப்போடு, வளமான குடும்ப பின்னணி உள்ள அர்ச்சகர்கள் வேண்டுமானால், இந்த இக்கட்டான சூழ்நிலையை எளிதாக கடந்துவிடுவார்கள். எங்களில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அநேகம் பேர் உண்டு. ஒரு அர்ச்சகராக இருந்துகொண்டு, இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், எங்களது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை அவர் அறிந்திருக்கிறார். அதனால்தான், இந்த ஊரடங்கு நேரத்தில் எங்களை அழைத்து உதவி செய்திருக்கிறார்.” என்றார், தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அர்ச்சகர்.
அர்ச்சகர்களுக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டது, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை. சிவகாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில், திருத்தங்கல்லில் உள்ள நின்ற நாராயணபெருமாள் கோயில், கருநெல்லி நாதர் சுவாமி கோயில், எம். புதுப்பட்டியில் உள்ள கூடமுடையார் அய்யனார் கோவில் ஆகிய இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, தலா ரூ.10,000, கோயில் பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 என, மொத்தம் 50 பேருக்கு, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, தனது சொந்த செலவில் வழங்கியிருக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. மேலும், விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஏற்பாட்டில், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்திருக்கிறார்.
ஆன்மீகத்திலும், இந்து மத நம்பிக்கையிலும் அதீத ஈடுபாடு உள்ளவர் என்பதால், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களின் குடும்ப சூழ்நிலையைத் தெரிந்துகொண்டு உதவியிருக்கிறார் அமைச்சர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேறு சில கோவில்களின் அர்ச்சகர்களுக்கும் இதே ரீதியிலான உதவி தொடரப் போகிறதாம்.