கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல் அண்ட் டி நிறுவனம் சாா்பில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் 1,000 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும், கூகுள் நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 400 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தார். பின்னர் அவா், செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அரசின் போா்க்கால நடவடிக்கையின் மூலம் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் 2ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,000க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 310 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை 1,082 படுக்கைகளுடன் பிரத்யேக கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மொத்தம் 1,082 படுக்கைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகள், 783 ஆக்சிஜன் படுக்கைகள், 199 சாதாரண படுக்கைகள் உள்ளன. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஒரே நேரத்தில் 280 பேருக்கு அளிக்க முடியும். தற்போது, 1,400 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த முடியும் என்றாா். தொடர்ந்து அவர், நீலகிரி மாவட்டத்தில் பிடிபட்ட ரிவால்டோ யானையை காட்டில் விடுவிக்க அரசும், வனத் துறையும் தயாராக உள்ளது. ஆனால், வன விலங்கு என்பதால் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் உணவு சாப்பிடவே சிரமப்பட்டு வருகிறது.
யானைக்கு சிகிச்சை அளித்து கும்கி யானைகளுடன் பழகவிட்டு யானைகள் முகாமில் உணவு வழங்கப்படுகிறது. ஊருக்குள் வந்து பழக்கப்பட்டதால் காட்டில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதனை கும்கி யானையாக பழக்கப்படுத்தி முகாமில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றாா். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஆா்.ரவீந்திரன், எல் அண்ட் டி நிறுவன திட்ட மேலாளா் ராஜா சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.