சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வள பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் என்ற வாசகம் தி.மு.க.விற்கு பொருந்தும். தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் தி.மு.க.வின் கண்களுக்கு மக்கள் தெரிவார்கள். அ.தி.மு.க.வை மீண்டும் அரியணையில் ஏற்ற மக்கள் அனைவரும் தயாராக உள்ளார்கள். கனிமொழி எடப்பாடியில் இருந்து பரப்புரை சென்றாலும் சரி; இமயமலையில் இருந்து சென்றாலும் சரி கவலையில்லை. மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் தி.மு.க.வில் கண்டிப்பாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாளை வலியுறுத்தப்படும். ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" இவ்வாறு அமைச்சர் கூறினார்.