ஆளுநர் பதவியை விமர்சிக்கும் தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏன் அப்பதவியை ஒழிக்கவில்லை? என்று அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை அறிந்து தான் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். அ.தி.மு.க. அரசுக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிவுடன் செயல்படுகிறது தி.மு.க. உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் செய்வதாக மு.க.ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிக்கைகளே ஒப்புக் கொள்கின்றன.
முதல்வர் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டம் முதல்வருக்கு தெரியும். உள்ஒதுக்கீடு குறித்து தி.மு.க. பேசியதுமில்லை, யோசனை சொல்லவுமில்லை, அ.தி.மு.க. அரசின் யோசனையில் வந்த சட்டம் இது. பெண்மையைப் போற்ற வேண்டுமே தவிர தூற்றக்கூடாது; பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது கண்டனத்துக்குரியது. சமுதாயத்தில் பெண்களின் பங்கு காலங்காலமாக இருந்து வருகிறது. திருமாவளவன் புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ஆளுநர் பதவியை விமர்சிக்கும் தி.மு.க. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏன் அப்பதவியை ஒழிக்கவில்லை? ஆளுநர் பதவி தேவையில்லை என்பது அ.தி.மு.க.வின் கொள்கை அல்ல" இவ்வாறு அமைச்சர் கூறினார்.