கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149- வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-ல் 9,500 பணியிடங்களில் 6,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,000 பணியிடங்களுக்கு கரோனா காரணமாக கலந்தாய்வு தள்ளிப்போனது கலந்தாய்வு விரைவில் நடைபெறும். கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க. ஒருபோதும் மீறவில்லை. கூட்டணியில் இருப்பவர்களும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது கடமை. கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. ஆரோக்கியமற்ற கருத்துக்களைத் தெரிவிக்கும்போதுதான் விமர்சனத்திற்கு தள்ளப்படுகிறோம். நடிகர் விஜய்யால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது. அரசின் நிர்வாக காரணங்களால் ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. எந்த அழுத்தமும் தங்களை நிர்பந்திக்க முடியாது. சசிகலாவின் தலையீடு அ.தி.மு.க.வில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" இவ்வாறு அமைச்சர் கூறினார்.