கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் கூறியதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார். அண்மையில் விஜய் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை வைத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாபோல் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போதும், தேனியில் நடிகர் விஜய்யை, எம்.ஜி.ஆர் போல் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதே என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "கப்பலோட்டியவர்களெல்லாம் வ.உ.சி ஆகிவிட முடியாது. மீசையை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகமுடியாது. செஞ்சி கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் தான். அமைச்சர்கள் யாரும் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என்பதற்கு என்று எங்களுக்கு பா.ஜ.க முருகன் கட்டளை போடக் கூடாது. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கிறோம். ஒரு நூலிழை கூட தர்மத்தை மீறவில்லை" என்றார்.