திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 16,17,18 உள்பட சில வார்டுகளுக்குச் சென்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அங்குள்ள பொது மக்களிடம் குறைகளைக் கேட்டார். ‘எங்கள் பகுதியில் உள்ள சாலையும், சாக்கடை கால்வாயும் பழுதாகியுள்ளது, அதனைச் சரி செய்து தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். மற்ற பகுதி மக்கள் ‘எங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் போர் போட்டுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதனிடையே முதியோர் உதவித் தொகை கேட்டு 3 முதியோர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இப்படியாக வார்டு மக்களின் கோரிக்கைகளைக் கேட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
அதேபோல் நெசவாளர்கள் நெய்த சேலைகள் சரிவர சொசைட்டிகளில் கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. அதைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், ‘இன்னும் இரண்டு நாளில் சென்னை செல்கிறேன், அங்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். இதையடுத்து 18வது வார்டில் வசித்து வரும் கௌசல்யா என்ற இளம்பெண் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், தனக்கு அரசுப் பணி மற்றும் அரசு சார்ந்த பணிகள் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் மனு கொடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், அப்பெண்ணுக்கு சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
பின்னர் 3வது வார்டு பகுதியில் வசித்து வந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் மறைந்த பாக்கியராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அவருடைய மனைவி புனிதாவுக்கு சத்துணவில் வேலை போட்டுத் தருவதாக உறுதி அளித்ததோடு நிதி உதவியும் செய்தார். மேலும் மற்ற வார்டுகளுக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், அம்பை ரவி மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.