
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரத்தில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் எம்.பி ப.வேலுச்சாமி, ஒன்றிய பெருந்தலைவர் சிவகுரு சாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் நவநீதிகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் முகாம் அலுவலகத்தைத் திறந்து வைத்து விட்டு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியசாமி, “கிராமப்புறங்களின் வளர்ச்சி நகரத்துடன் அது இணைந்து செய்யும் தொழிலைப் பொறுத்து அமைகிறது. குறிப்பாக வேலைக்குச் செல்வோர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவதற்கு நகரப் பேருந்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதுபோல் காலை, மாலை இரு வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் நகரங்களுக்குச் சென்று படித்துவிட்டு வர நகரப் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்து வருடங்களாக ஆத்தூர் தொகுதியில் எந்த ஒரு கிராமத்திற்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதியும் உள்ளது. கலைஞர் ஆட்சியின்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும், போக்குவரத்துத்துறை நஷ்டம் ஏற்பட்டபோதும் கிராமங்களுக்குச் சென்று வந்த நகரப் பேருந்துகளை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. காரணம் கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாடு உள்ளது என்பதை உணர்ந்தவர் கலைஞர். அவர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ஒரு படி மேலே போய் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டத்தையும் அறிவித்துவிட்டு நூறு சதவிகிதம் செயல்படுத்தி இருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்” என்று கூறினார்.
அதன்பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றபோது பலர் தங்களுடைய கிராமங்களுக்குச் சாலை வசதி இல்லை எனக் கூறி மனு கொடுத்தனர். மேலும் சிலர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, புதிய குடிதண்ணீர் குழாய் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு கொடுத்தனர். பொதுமக்களில் ஒரு சிலர், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதில்லை. எந்த ஒரு மனு கொடுத்தாலும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியவுடன் ஒன்றிய பொறியாளர் தேக்கராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதாவை அழைத்து பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இங்கு வேலை பாருங்கள். இல்லையென்றால் வேறு ஒன்றியத்திற்குச் சென்று விடுங்கள் என்று கூறியதோடு, ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை உடனடியாக தனது பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.