விருதாச்சலத்தில் கடந்த 1921 ஆம் ஆண்டு அரசு துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு இன்று 100 ஆண்டு கடந்த மேல்நிலைப் பள்ளியாக சிறப்பாக திகழ்ந்து வருகிறது. இப்பள்ளி பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள பல வல்லுநர்களை உருவாக்கி பெருமை கண்டிருக்கிறது. இதில் தற்போது 850 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 42 ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறையினர் என பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இந்த நிலையில் பள்ளி 100 ஆண்டு கடந்த நிலையில் பள்ளியின் வளாகத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா, விருத்தாசலம் நகர மன்ற தலைவர் சங்கவி, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் துரைபாண்டியன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அமைச்சர் சி.வெ கணேசன் நூற்றாண்டு சுடர் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் நூற்றாண்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்” எனப் பேசினார்.
முன்னதாக விழா தொடங்கும் போது நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் விழா மேடையில் அம்மா குறித்து பாடல் ஒன்று பாடினார். அதை அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அமைச்சர் சி.வெ கணேசன் கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுதார். அப்போது அவரை அனைவரும் கவனிப்பதை கண்டு கையில் வைத்திருந்த துண்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டு சகஜநிலைக்கு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.