தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று (11/08/2021) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர், தூத்துக்குடிக்கு தேசியக் கொடி கட்டிய தனது சொந்த காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 'எப்போதும் வென்றான்' அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் கீதா ஜீவன் பயணித்த காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த பாதுகாப்பு காவல்துறையினரின் வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பின்னால் வந்து கொண்டிருந்த அமைச்சருக்குரிய அரசு இன்னோவா கிரிஸ்டா காரும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு காவல்துறையினரின் வாகனத்தில் முட்டி மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்துக்குள்ளான அரசு காரில் அமைச்சர் கீதா ஜீவன் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இவ்விபத்து தொடர்பாக எப்போதும் வென்றான் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் கீதா ஜீவன் அண்மைக் காலமாக தனது சொகுசு காரில் தேசியக் கொடியைக் கட்டி, அதில் பயணித்து வருகிறார். அந்த காரில் அமைச்சர் கீதா ஜீவன் அதிவேகமாகப் பயணித்த காரணத்தினால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் எஸ்கார்ட் வாகனமும், அமைச்சருக்குரிய அரசு காரும் அதிவேகத்தில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளது. அமைச்சரின் சொகுசு கார் வேகத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவுக்கு அரசு கார்கள் இல்லை. இதனாலேயே விபத்து நேரிட்டு உள்ளது என விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.