புதுக்கோட்டையில் அமைச்சர் பதாகை கிழிப்பு: தொடரும் சம்பவத்தால் பரபரப்பு
புதுக்கோட்டையில் அக்டோபர் 13ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 50 நாள் கால இடைவெளி உள்ள நிலையில் புதுக்கோட்டை ர.ர.க்கள் கடந்த ஒரு வாரமாகவே பெரிய பெரிய பதாகைகள் வைத்துள்ளனர். ஒபிஎஸ் இணைந்த பிறகு துணை முதல்வர் பதவி ஏற்ற பிறகும் கூட புதுக்கோட்டை நகரில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் ஒபிஎஸ் படம் இல்லை. அதனால் ஒரே அணியாக இருந்தாலும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபிஎஸ் படம் இல்லாத எடப்பாடி படம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள பதாகையை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். அந்த பதாகைகளை ஒபிஎஸ் தரப்பினர் தான் கிழித்தார்கள் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 3 பேரை கைது செய்த போலிசார் மாலை வரை காவல் நிலையத்தில் விசாரனை செய்தனர். இதனால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாமன்னர் கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பதாகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் கிழிக்கப்பட்டுள்ளது. இந்த பதாகையிலும் ஒபிஎஸ் படம் இல்லை. இதனால் அணிகள் இணைந்தாலும் புதுக்கோட்டையில் மட்டும் எடப்பாடி - ஒபிஎஸ் அணிகள் பிரிந்தே நிற்பதை காட்டுகிறது.
இரா.பகத்சிங்