திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாகத் தூர்வாரப்பட்டு, ஆறுகளின் கரைகள் அனைத்தும் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்துவது, சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாகப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளைப் பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்விற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிஷப் ஹீபா் பள்ளியில் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 468 பயனாளிகளுக்கு 60.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், இலவச வீட்டு மனைப் பட்டா, மகளீா் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டவா்களுக்கு நலத்திட்டத உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.