Skip to main content

மாணவனை அடித்து காலில் விழச் சொன்ன ஆசிரியர்; அரசுப் பள்ளியில் கொடூரம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Gummidipoondi Govt School Teacher beating Student

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு அடுத்துள்ளது பூவலம்பேடு கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி செவ்வந்தி. இந்த தம்பதிக்கு ஹரிஹரன் என்ற ஒரு மகன் உள்ளார். 12 வயதான ஹரிஹரன், குருவராஜகண்டிகை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

 

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த மோகன்பாபு என்பவர், இந்த அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, ஆசிரியர் மோகன்பாபு இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் இருப்பார் எனக் கூறப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், கடந்த 7 ஆம் தேதி மதியம் 2 மணியளவில், ஆசிரியர் மோகன்பாபு ஹரிஹரன் படிக்கும் 6 ஆம் வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த மோகன்பாபு, பின்னால் திரும்பிப் பார்த்துள்ளார். அப்போது, வகுப்பில் இருந்த மாணவன் ஹரிஹரன் சக மாணவர்களுடன் குறும்புத்தனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ஆசிரியர் மோகன்பாபு, “அங்க என்னடா இங்க வாடா” என ஹரிஹரனை கோபமாக அழைத்துள்ளார்.

 

இதனால் பதற்றமடைந்த ஹரிஹரன் அச்சத்துடனே ஆசிரியருக்கு அருகில் வந்து நின்றுள்ளார். அந்த சமயம், கடும் கோபத்தில் இருந்த மோகன்பாபு, “என்னடா கிளாஸ கவனிக்க மாட்டியா? உனக்கெல்லாம் ரெண்டு போட்டாதான் புத்தி வரும்” என  தன் கையில் வைத்திருந்த பிரம்பால் மாணவர் ஹரிஹரனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பிரம்பால் கடுமையாகத் தாக்கியது மட்டுமல்லாமல் மாணவனைத் தன்னுடைய காலில் விழச் சொல்லி ஆபாசமாகப் பேசியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் மாணவன் ஹரிஹரனுக்கு கை கால் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும், வீட்டிற்கும் அனுப்பாமலும் பள்ளியிலேயே வைத்திருக்கின்றனர். 


மேலும், மாணவனுக்கு வீக்கம் ஏற்பட்ட இடங்களில் ஐஸ் கட்டியால் இரவு எட்டு மணி வரை ஒத்தடம் கொடுத்து, அதன்பிறகே வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, இதுபற்றி வீட்டில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அன்றிரவு வீட்டிற்குச் சென்ற ஹரிஹரன், ஆசிரியர் தன்னைத் தாக்கியதாகச் சொல்லவில்லை. ஆனால், அடுத்த நாள் காலை தன்னுடைய மகனுக்கு உடம்பில் வீக்கம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகு, ஹரிஹரனிடம் இதுகுறித்து கேட்டபோது நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஹரிஹரனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு படையெடுத்தனர். 

 

அந்த சமயம், மாணவனின் பெற்றோர் இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகார் அளித்ததை அடுத்து, தற்காலிக ஆசிரியர் மோகன்பாபுவை அழைத்து நடந்தவற்றை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆவேசமடைந்த உறவினர்கள், மோகன்பாபுவை சரமாரியாகத் தாக்கினர். மேலும், அங்கிருந்த சக ஆசிரியர்கள் மோகன்பாபுவை காப்பாற்ற முயற்சித்த போதும், அவரை செருப்பால் அடித்தும் சட்டையைக் கிழித்தும் சரமாரியாகத் தாக்கினர். 

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆசிரியர் மோகன்பாபுவை பாதுகாப்பாக மீட்டனர். இதற்கிடையில், இந்த மோதலில் சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்து கீழே சரிந்த ஹரிஹரனின் தாயார் செவ்வந்தி தனியார் வாகனத்திலும், பொதுமக்களால் தாக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் மோகன் பாபு ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அதோடு விடாமல் மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, சம்பவ இடத்தில் குவிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலையச் செய்தனர்.

 

இதையடுத்து, ஆசிரியரைத் தாக்கியதற்காக மாணவனின் உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, மாணவனைத் தாக்கிய ஆசிரியரைப் பள்ளிக்குள் புகுந்து செருப்பால் அடித்த உறவினர்களின் வீடியோ, பொதுமக்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்