அதிமுக தேர்தலில் தோற்றதால் காலை கிழித்துக்கொண்ட தொண்டரிடம் சசிகலா தொலைப்பேசியில் ஆறுதல் கூறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. அதிமுகவை தோல்வியில் இருந்து மீட்க மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் அதிமுக தோற்றதால் தூத்துக்குடியில் தொண்டர் ஒருவர் காலில் கிழித்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அவரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட சசிகலா ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற முதியவர் அதிமுக தோல்வியால் காலை கிழித்துக்கொண்டார். தொலைபேசியில் தொடர்புகொண்ட சசிகலாவிடம் ''நான் தூத்துக்குடியில் இருக்கிறேன். கட்சிக்காக கஷ்டப்பட்டவன். எம்ஜிஆருடைய காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கிறேன்'' என்றார். அதற்கு சசிகலா, ''கேள்விப்பட்டேன். இந்த மாதிரி செய்வது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதிரி எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு செயல்படக் கூடாது. உங்களுக்கு குடும்பம் இருக்கு அவர்களை எல்லாம் நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா? நீங்கள் கவலைப்படாதீங்க'' என்றார். ''202ல் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்'' என்று செல்வகுமார் தெரிவித்தார். ''2026-ல் ஆட்சி அமைப்போம். என்னை நம்புங்க'' என சசிகலா ஆறுதல் கூறினார். ''எம்ஜிஆரருடைய கட்சி இப்படி போனதே கிடையாது. டெபாசிட் இழந்தது கிடையாது. அந்த வேகத்தில் பந்தயம் கட்டி இப்படி செய்து விட்டேன்'' என்று முதியவர் செல்வகுமார் சசிகலாவிடம் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.