தமிழகத்தில் மே மாதத்தில்தான் கத்திரி வெய்யில் ஆரம்பிக்கும். அப்போது எப்போதும் இல்லாத அளவிற்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் வயோதிகர்கள், உடல் நலம் குன்றியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு மே 4-ந்தேதி முதல் மே28-ந்தேதி வரை கத்திரி வெய்யில் ஆரம்பம் ஆகிறது.
இந்த நேரங்களில் வெய்யிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் செல்ல வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இறுதி 30-ந்தேதியே கடலூர் மாவட்டத்தில் 100.2 டிகிரி வெய்யிலின் தாக்கம் இருக்கிறது என்று கடலூர் மாவட்ட வானிலை மைய பொறுப்பாளர் பாலமுருகன் கூறுகிறார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட கூடுதலாக வெய்யிலின் தாக்கம் ஏற்படும். எனவே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை குறைத்து கொள்ளவேண்டும். குறிப்பாக வயதானவர்கள், நோய் வாய் பட்டவர்கள் வெய்யிலில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும், பழச்சாறுகளை அருந்த வேண்டும், தவிர்க்க முடியாத நிலையில் வெளியே சென்றாலும் ஒரு பாட்டிலில் தண்ணீர் கண்டிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.