குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறப்பது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ''விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்க இருக்கிறோம்'' என தெரிவித்திருந்தார். அதேபோல் ''குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார்'' என்றும் கூறியிருந்தார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு இருக்கும்.
இதனால் கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யக்கூடிய கனமழையால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற சூழலில், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். ஒருபக்கம் தென்மேற்கு பருவமழை தொடக்கம், மறுபுறம் ஜூன் 12இல் மேட்டூர் அணை திறப்பு என்ற செய்திகளால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர் டெல்டா விவசாயிகள்.