சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (28/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "தமிழக அரசு முழு ஊரடங்கை ரத்துச் செய்வததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகள் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இன்று (28/01/2022) முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல் மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகள் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.