வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (31.12.2023) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும், நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (01-01-24) கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.