வியாபாரிகள் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராகம் சவுந்தர பாண்டியன் பேசியதாவது; “தமிழகத்தில், வியாபாரிகள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் தாக்கப்பட்டுள்ளனர். இதில் நாடார்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். வியாபாரிகள் சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அரசியல் சங்கங்களாக மாறிவிட்டன. வியாபாரி சங்கங்களின் தலைவர்கள் சாதி, மதம் பார்க்காமல் இறங்கிப் போராட வேண்டும். வியாபாரிகள் சங்கங்கள் ஒன்றும் செய்யாததால்தான் இந்திய நாடார்கள் பேரமைப்பு இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து உள்ளது.
தமிழக மக்களை பாதுகாப்பது எப்படி முதலமைச்சரின் கடமையோ, அதேபோன்று வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் செயலி வழங்கப்பட்டுள்ளது போன்று, வியாபாரிகளின் பாதுகாப்புக்கு வியாபாரிகள் காவலன் என்ற செயலி உருவாக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் அரசு டாக்டர்கள் அதிக அளவில் தாக்கப்பட்டபோது, அவர்களின் போராட்டத்தின் காரணமாக அரசுப்பணியில் இருக்கும் டாக்டர்களைத் தாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அதே போன்று, வியாபாரிகளைத் தாக்குபவர்களுக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டால், இது போன்ற வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் குறையும்.” இவ்வாறு அவர் பேசினார். இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.