Skip to main content

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு! 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஏ.கே சமூக சேவை விழிப்புணர்வு இயக்கம் - போதை இல்லா உலகம் இந்தியா அமைப்பு சார்பில் போதை பொருட்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.  


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுவதன் அவசியம் குறித்தும், போதை பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார். எ.கே சமூக  சேவை அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் கலந்து கொண்டு போதை மருந்துகள், கஞ்சா, கோகைன் மற்றும் போலி மாத்திரைகள் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், மாணவர்களின் உடல் நலத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் கருத்துரை வழங்கினார்.   

 Anti-Drug Awareness PROGRAM CUDDALORE


மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரி கதிரவன் மாணவ- மாணவிகளிடம் போதைப்பொருட்களின் தீமைகளையும், எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியில் போதைப்பொருட்கள் குறித்த புகார்கள் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புதுச்சேரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவுபடி லாஸ்பேட்டை பகுதியில் கஞ்சா  உபயோகப்படுத்தும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக லாஸ்பேட்டை காவல் நிலையம் மற்றும் புறநகர் குடியிருப்பு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தை சுற்றி இருக்கின்ற இடங்கள், விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகள், குறிஞ்சி நகர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலை, ஆடுகளம், நாவர்குளம், விமானதளம் பின்புறம் போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியே இருந்து வரும் இளைஞர்கள் கஞ்சா புகைப்பதாக ஒரு சில தகவல்கள் வருகின்றன. 

 Anti-Drug Awareness PROGRAM CUDDALORE


லாஸ்பேட்டை குற்றப் பிரிவு போலீசாரும், ரோந்து காவலர்களும் மேற்சொன்ன இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொது மக்கள் மேற்சொன்ன இடங்களை தவிர்த்து வேறு எங்கும் இளைஞர்கள் கஞ்சா பிடிப்பதாக தெரிய வருமாயின் கீழ்க்கண்ட கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு (8056661383, 8680868953) லாஸ்பேட்டை காவல் நிலையம் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் கஞ்சா இல்லாத புதுச்சேரி மாநிலத்தை உருவாக்க பொதுமக்களும் காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்