1979 மார்ச் 16-ஆம் தேதி, விஜயகாந்த் நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் இனிக்கும் இளமை. சுதாகர் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோவார் விஜயகாந்த். இதே ஆண்டில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த அகல் விளக்கு டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸானது. 1980-ல் நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடிமுழக்கம் என வரிசையாக அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. ஆனாலும், 1981-ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் வெற்றிதான், கதாநாயகனாக அவரை கவனிக்கவைத்தது.
1978-ல் விஜயராஜாக இருந்த விஜயகாந்தை பல்வேறு கோணங்களில் ஸ்டில் எடுத்தவர், மதுரையில் ராசி ஸ்டுடியோ நடத்திவரும் ஆசைத்தம்பி. அவர் எடுத்த போட்டோ ஒன்று அன்றைய பிரபல பருவ இதழில் வெளியாகி, சினிமாவில் விஜயராஜ் நடிப்பதற்கு வாய்ப்பினைப் பெற்றுத் தந்தது.
‘தூரத்து இடிமுழக்கம்’ வெளிவந்தபோது ‘நம்ம மதுரைக்காரன் ஒருத்தன் சினிமாவுல ஹீரோவா நடிக்கிறான்’ என்று பேசப்பட்ட நிலையில், விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொள்வதற்கு சிறுவர்களில் இருந்து இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
அந்த நாட்களை நம்மிடம் நினைவுகூர்ந்தார் ஆசைத்தம்பி, “அப்பல்லாம் சைக்கிள் ரிக்ஷாவுலதான் எங்க ஸ்டூடியோவுக்கு வருவார் விஜயகாந்த். சொந்தமாக மோட்டார் பைக் எதுவும் அவர்கிட்ட இல்ல. ஸ்கூல் பசங்கள்ல இருந்து இளவட்டங்கள் வரைக்கும் அவருகூட குரூப் போட்டோ எடுத்துக்கணும்னு எங்க ஸ்டூடியோவுக்கு விஜயகாந்த் பின்னாலயே வருவாங்க. நானும் அவர வச்சு குரூப் போட்டோக்கள் எடுத்தேன். அப்பல்லாம் விஜயகாந்த் வீட்ல அவங்க அப்பா ரொம்ப கெடுபிடியா இருந்தாரு. அதனால, நான் எடுத்த போட்டோவுக்கு விஜயகாந்தால பணம் கொடுக்க முடியல. நானும் சரின்னு விட்டுட்டேன்.
விஜயராஜ் போட்டோ எடுத்த பாக்கியே ரூபாய் எட்டாயிரத்துக்கும் மேல ஆயிருச்சு. விஜயராஜ் பெரிய நடிகரானதும் அவரை முதன்முதல்ல போட்டோ பிடிச்சது ராசி ஸ்டூடியோ ஆசைத்தம்பின்னு பேராயிருச்சு. இந்தப் பேரை வச்சே, சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்படறவங்க எங்க ஸ்டூடியோவுக்கு படையெடுத்தாங்க. அந்தவகையில, அப்பவே ஐம்பதாயிரம் ரூபாய் வரை நான் சம்பாதிச்சிருக்கேன். எட்டாயிரம் போனாலும், ஐம்பதாயிரம் வந்ததுல, விஜயகாந்தை வச்சு ஸ்டில் எடுத்ததுல, கூட்டி கழிச்சு பார்த்தா எனக்கு நல்ல லாபம்தான். விஜயகாந்த் கூட நின்னு குரூப் போட்டோ எடுத்த ரொம்பப் பேரு, அப்ப கையில பணம் இல்லாம, போட்டோ வாங்க வரல. அந்த போட்டோக்கள் நாலஞ்சு இப்பவும் என்கிட்ட இருக்கு” என்று காண்பித்தார், ஸ்டில்ஸ் எடுப்பதற்காக, முதன் முதலில் விஜயகாந்தை ‘டைரக்ட்’ பண்ணிய ஆசைத்தம்பி.