கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக் குழு கூட்டம் குழு தலைவர் செல்வி தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒன்றிய நிர்வாகத்தில் முறையான வரவு செலவு கணக்குகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, ஒன்றிய பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து கவுன்சிலர்களான எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளான எங்களை ஒன்றிய நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்றிய நிர்வாகம் என்று குற்றம் சாட்டினார்கள்.
இந்த கூட்டத்தில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து உள்ளாட்சி நிர்வாகம் சரியாக செயல்பட முடியவில்லை என குற்றம் சாட்டினார். கவுன்சிலர்களின் சரமாரியான குற்றச்சாட்டுகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த சுயேச்சை கவுன்சிலர் சிவகுமார் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அதிகாரிகள் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த கவுன்சிலர் சிவகுமார் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைவதாக கூறிவிட்டு உறுப்பினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.