மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு பதில் அளித்து அவர் பேசும்போது, நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லாமல் இருக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்றார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது குறித்து நெருங்கிய நண்பர்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்டார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் இறுதியிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விடுபட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அப்போது அரசியல் பிரவேசம் குறித்த தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வருகிற 20-ந் தேதி திருச்சியில் கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.