சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையின் படி, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லித்தான் நான் ரத்து செய்ததாக அவர் பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார். அரசு அறிவிக்கவுள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அதை அறிவித்துவிடுகிறார். மக்களுக்கு எந்த காலகட்டத்தில் உதவிச் செய்ய வேண்டுமோ, அதை அந்தந்த காலத்தில் செய்கிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 6 சவரன் வரையான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளேன். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன. எந்த மாநிலங்களும் பணத்தை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. அரசின் அறிவிப்புகளுக்கும், தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை அரசு நிறைவேற்றும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தி.மு.க. குரல் கொடுக்கவில்லை; தேர்தல் வந்தால் குரல் கொடுப்பார்கள்.
2011-ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப, இப்போது ரூபாய் 5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இ-டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும்? எங்கிருந்து வேண்டுமானாலும் இ-டெண்டர் எடுக்கலாம். மின்னணு முறை டெண்டர் விடுவதில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என ஏற்கனவே தெளிவுப்படுத்தினேன். ரூபாய் 40,000 கோடிக்கு டெண்டர் என்றால் உடனடியாக முழு தொகையையும் செலவிட்டுவிடுவதில்லை. அரசியலுக்காக டெண்டரில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். விவசாயக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75% விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறோம். இயற்கைச் சீற்றங்கள், கரோனா பாதிப்பு ஆகிய சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு கரோனா காலத்தில் ரூபாய் 1,000 நிதியுதவி, பொங்கலுக்கு ரூபாய் 2,500 நிதியுதவி அளித்தோம். பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்." இவ்வாறு முதல்வர் கூறினார்.