நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே போனது. இதனைச் சரி செய்யும் விதமாகத் தமிழ்நாடு அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியது. அதன் பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஓரளவு மருத்துவக் கல்வி கனவு நினைவாகத் தொடங்கியது. அதன்படி சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கிய முதல் ஆண்டில் தொடங்கிக் கடந்த ஆண்டு வரை 19 மாணவிகளை மருத்துவம் படிக்க பல்வேறு கல்லூரிகளுக்கு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை அனுப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 3 எம்.பி.பி.எஸ்., ஒரு பல் மருத்துவம் என 4 சீட்டுகளைப் பெற்றுச் சாதித்துள்ளனர். அதாவது இன்று (22.08.2024) நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் எஸ். ஸ்வேதா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி, ஜி. புவனா தேனி அரசு மருத்துவக் கல்லூரி, ஆர். அபிநயா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஆர்.சதா சென்னை எம்.எம்.சி அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக்கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து சாதிக்கும் மாணவிகளையும், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எம்.சி. நிர்வாகங்களையும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகின்றனர். இதே போல வயலோகம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்த்தி, ஜெயந்தி, சுதாகர், சுபஸ்ரீ ஆகிய 4 பேரும் எம்.பி.பி.எஸ். படிக்க சீட் கிடைத்துள்ளது. மேலும் கந்தர்வக்கோட்டை ஜனார்த்தனன், கொத்தமங்கலம் இளந்தமிழன், வெட்டன்விடுதி மதன்குமார், மாங்காடு தருண் உள்பட 25 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.