ஆரம்ப கால தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தின் நாசரேத் துரை, 1993ன் போது தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்து ம.தி.முக.வைத் தொடங்கியபோது அவருடன் வந்தவர் நாசரேத் துரை. அவரை ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக்கினார் வைகோ. கட்சியின் செயல்பாடுகளில் தவறாது கலந்து கொண்டவர் நாசரேத்துரை.
83 வயதான நாசரேத் துரை அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த 4ம் தேதி அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். நாசரேத் துரையின் மனைவி அமெரிக்காவில் பணி ஒய்வு பெற்று திரும்பியவர். அவரது மூன்று மகள்களும் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். அவர்கள் வர வேண்டியிருந்ததால் அவரது உடலடக்கம் 7ம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ நேற்று நாசரேத் துரையின் இல்லம் வந்து அவரது உடலுக்கு மாலையணிவித்து இறுதியஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில், “நாசரேத் துரை ம.தி.மு.க.வில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். பல்வேறு பொறுப்புக்களை வகித்து மக்களிடம் நல்லுறவுடன் பணியாற்றியவர். அவரது மறைவு ம.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் பாதிக்கும் வகையில் உள்ளது. அவரை இழந்தது மிகுந்த வேதனை தரும் வகையிலிருக்கிறது” என கண் கலங்கினார் வைகோ.
மேலும் தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.