விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.