பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியிருக்கிறது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம்.சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இப்படத்தை,விஜய்யின் உறவினர் ஜான் பிரிட்டோ தயாரித்திருக்கிறார்.அந்தப் படம், ஏப்ரல் 9-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா வைரஸ் பிரச்சனையால் கடந்த 24- ந் தேதி மாலை முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள்ளே மக்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,திரையரங்குகளும் இயங்கவில்லை.
திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் 'மாஸ்டர்' படம் திட்டமிட்டபடி திரையிட முடியாத நிலை. இப்படி ஒரு சூழல் வரும் என மாஸ்டர் படத் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ,நடிகர் விஜய்,விநியோகஸ்தர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.மார்ச் 31-க்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்து விடும் என எதிர்பார்த்தனர்.ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்தச் சூழலில், கரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதாலும்,ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு,மாநில முதல்வர்கள் கோரிக்கை வைப்பதாலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்கிற அச்சம் மாஸ்டர் படத் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வந்திருக்கிறது.
கந்து வட்டிக்குப் பணம் வாங்கி விநியோகஸ்தர்கள் பலரும் மாஸ்டர் படத்திற்காக முதலீடு செய்திருக்கிறார்கள்.நாட்டில் நிலவும் தற்போதைய சூழலில்,தியேட்டர்கள் எப்போது திறந்து, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாக தெரியாத நிலையில்,தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தந்து விடுங்கள்;எங்களால் கடனும் அதனால் அதிகரிக்கும் வட்டியும் தாங்க முடியாது எனத் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோவிற்கு நெருக்கடி தந்து வருகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
மொத்த பணத்தையும் படத்தயாரிப்பில் முதலீடு செய்திருப்பதால் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது தயாரிப்பு தரப்பு.இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.பி.யும், பாஜகவில் இணைந்திருப்பவருமான சசிகலா புஷ்பாவின் உதவியை நாடியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சிலர்.அவர்களுக்காக பஞ்சாயத்தில் குதித்துள்ளார் சசிகலா புஷ்பா!.இதனால்,மாஸ்டர் படக் குழுவினர் வட்டாரங்களில் சத்தமில்லாமல் ஒரு பரபரப்பு எதிரொலிக்கிறது.