கரோனா பரவலை தடுக்க ஒரே இடத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று இன்று வரை பாரத பிரதமர் முதல் தமிழக முதல்வர், அமைச்சர்கள் வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட குறிப்பிட்ட நபர்களே பங்கேற்க வேண்டும் என்று உச்ச வரம்போடு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதே காரணங்களைக் காட்டி எதிர்கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால் வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். கிராம சபை கூட்டங்கள் நடத்தினால் கரோனா பரவும் என்று அதனையும் ரத்து செய்தார்கள். ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் எந்த உத்தரவும் கட்டுப்படுத்தவில்லை. பாஜக ஆங்காங்கே பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் அதிமுக கட்சி தொடங்கிய நாளை கொண்டாட மக்கள் கூட வேண்டாம் என்று அடிக்கடி சொல்லும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவினர் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடி இனிப்புகள் வழங்கி போலீஸ் பாதுகாப்போடு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்ட சாலையில் பேரணியாகச் சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாகைள் அணிவித்தனர்.
பார்த்த சாமானிய மக்கள் கேட்பதோ.. ஆளுங்கட்சியினர் ஒரே இடத்தில் கூடினாலோ, பேரணி நடத்தினாலோ கரோனா கிருமி தாக்காது என்பதை இப்போது அறிந்து கொண்டோம் என்கிறார்கள். அதே போல நீதிமன்றங்களால் தடை செய்துள்ள பதாகைகளுக்கும் பஞ்சமில்லை.