இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது. அதே போல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருந்தாலும் பொதுமக்களின் மெத்தன போக்கால் கரோனாவின் பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது.
மேலும், டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா நோய் தடுப்பு பணியை மெத்தனமாக கையாளும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில், திங்களன்று (26.04.2021) மிண்ட் சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.