சேலம் அருகே, 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கணவர், மாமனார் ஆகியோரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி ரஞ்சித்குமார் என்ற இளைஞருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி மோகனா சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன் கணவருடன் தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மோகனா எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடித்திருந்த நிலையில், உறவினர் ரஞ்சித்குமாருக்கு இருதரப்பு பெற்றோர்களும் கூடிப்பேசி கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளதும், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமார், அவருடைய தந்தை ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர், கணவரின் தாய் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர்.