திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாய்க்கும் மனிதனுக்கும் திருமணம் செய்து வைத்து நாய்க்கு தாலி கட்டி வினோதமான கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் போராட்டம் அதிக கவனம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாய்க்கும் விவசாயி ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நல்லதங்காள் நீர் தேக்கத்திற்கு சுமார் 720 ஏக்கர் நிலம் 150 விவசாயிகளிடமிருந்து 26 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த நிலத்திற்கான உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டும் தற்போது வரை இழப்பீடு கொடுக்கவில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது நாய்க்கு தாலி கட்டி வினோதமான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.