திருச்சியில் மூடப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் விவகாரத்தில் வியாபாரிகளிடையே இரு வேறு கருத்துகளால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் நிலவிவருகிறது.
கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை சந்தைகள் மாநகரில் 10 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, அண்மையில் இரு முறை மழை பெய்ததில் ஜி கார்னர் மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் நனைத்து சிரமப்பட்டார்கள்.
ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி (இன்று) இரவு முதல் காய்கறி மொத்த விற்பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம் என்றும் வியாபாரிகளில் கோவிந்தராஜீலு தரப்பு அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டை திறக்கும் வரை ஜி கார்னர் மைதானத்திலேயே தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால், காய்கறி மொத்த விற்பனை நடைபெறுமா, இல்லையா என்று சிறு வியாபாரிகள், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கோவிந்தராஜூலு பத்திரிகையாளர்களிடம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை தளர்த்தப் பட்டுள்ளதால், காந்தி மார்க் கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி இரவு முதல் ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்று வரும் காய்கறி மொத்த விற்பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம். இந்தப் போராட்டத்துக்கு காந்தி மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.பாபு, “கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் அரசின் உத்தரவு வரும் வரை ஜி கார்னர் மைதானத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வோம். இந்த நிலைப் பாட்டில்தான் ஏராளமான வியா பாரிகள் உள்ளனர்” என்றார்.
இதற்கிடையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி மாவட்ட விவசாயிகள் கள்ளிக்குடி புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கள்ளிக்குடி அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் தற்காலிக சந்தை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இனி மேல் காந்திமார்கெட் திறந்தால் அது சட்ட விரோத மார்கெட் என்கிறார். மேலும் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் காந்தி மார்கெட் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை, காரணம் காந்தி சந்தையில் ஒர்ஜினல் கடை வைத்திருக்கும் வியாபாரிகளில் பலபேர் தற்போது வியாபாரம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் தங்கள் கடைகளை வாடகைக்கு விட்டு இருப்பதால் தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி கிடைக்காமல் இருக்கிறது.
ஆனால் ஜி.கார்னரில் இன்றைக்கு சந்தை நடக்குமா ? என்பதே தற்போது மக்களின் கேள்வியாக உள்ளது.