‘புரவி’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை தொடர்ந்து பெய்த மழையால், மாவட்டத்தின் கிழக்கு பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்கின்றன. குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள கொளக்குடி கல்குணம் ஓனான்குப்பம் வளையமாதேவி பின்னலூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் பெருமாள் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஆடுர் குப்பம் பூவாணி குப்பம் சிந்தாமணி குப்பம் மேட்டுப்பாளையம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் நடுத்திட்டு, செங்கழனி பள்ளம், நந்திமங்கலம் உட்பட அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இப்பகுதியில் வசித்த 48,000 குடும்பங்கள் அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி 72 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. பகுதியில் உள்ள சுரங்கங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கடலூர் பரங்கிப்பேட்டை ஆகிய கடலோர பகுதி கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. விட்டுவிட்டு பெய்துவரும் கனமழையால், காட்டுமன்னார்கோயில் குமராட்சி பகுதி உட்பட சிதம்பரம் நகரமும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து மழையின் காரணமாக ஆறுகளிலும் ஓடைகளிலும் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
இங்கிருந்து செல்லும் மழை நீர், கடலில் சென்று கலப்பதற்காக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள். இதற்காக மிகப்பெரிய அளவில் திட்டம் (இதற்கு அருவா மூக்கு திட்டம் என்ற பெயரும் இடப்பட்டுள்ளது) தயாரிக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் அவ்வப்போது கூறிக்கொண்டே இருக்கிறார்கள். மழைக்காலம் முடிந்த பிறகு அதைப்பற்றி கண்டுகொள்வதில்லை. அந்தத் திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும் இந்த கிராமங்கள் தண்ணீரில் இருந்து எப்போதுதான் பாதுகாக்கப்படும் என்று யாருக்குமே தெரியவில்லை. தமிழக அரசு இப்பகுதி மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும். எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் கடலில் கலக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கண்ணீரோடு அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.