பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்த இந்துமுன்னனி பிரமுகரை மிரட்டுவதாக அவர் கொடுத்த புகாரின்பேரில் பல இளைஞர்கள் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்து முன்னனியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வடிவேல் நேற்று மாவட்ட எஸ்பி செல்வராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்.. இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களான பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டில் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 17 ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன்.
அதன் பிறகு பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொன்றுவிடுவதாகவும், தகாத வார்த்தைகளாலும் மிரட்டி வருகின்றனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் 10 தொலைபேசி எண்களையும் இணைத்திருந்தார்.
இந்த புகார் மனுவை எஸ் பி நகரக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் நேற்று அரசர்குளம், மிரட்டுநிலை உள்பட பல ஊர்களில் இருந்தும் பலர் விசாரணைக்காக நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இது சம்மந்தமாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.