கரோனா வைரஸின் தாக்கம் உலகையே முடக்கிப்போட்டுள்ளது. சைனா, இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து என இதன் பரவல் எல்லைகள் தாண்டி உயிர்களைப் பறித்து வருகிறது. ஸ்பெயின் இளவரசி, இங்கிலாந்து பிரதமர், கனடா பிரதமரின் மனைவி என எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் தாக்கியுள்ளது கரோனா. 'அதெல்லாம் ஏதோ வெளிநாட்டுல, குளிர்பிரதேசத்துல வர்ற வியாதி' என்றுதான் முன்பெல்லாம் நாம் பல நோய்கள் குறித்து எண்ணினோம். ஆனால், அந்த எண்ணத்தையும் உடைத்து இந்தியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது கரோனா. தேசம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று ஆணையிடப்பட்டு முடிந்தவரை கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ள சொல்ல, அப்படி வீட்டிலிருந்து மேற்கொள்ளும் வகையில் இல்லாத பணிகளை செய்பவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர். சேவை பணிகளில் இருப்பவர்களும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களும்தான் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். நாடு இப்படியிருக்க, சோசியல் மீடியா எப்போதும் போல சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. எந்தப் பிரச்னை வந்தாலும் மீம்ஸ் போட்டு கொண்டாடும் கூட்டம் கரோனாவிலும் கைவைத்திருக்கிறது. சொல்லப்போனால் தனிமையின் அழுத்தத்தை குறைப்பதில் இந்த மீம்ஸ்களுக்கும் வீடியோக்களுக்கும் நல்ல பங்கு இருக்கிறது.
பிரபலங்கள், தாங்களே வீடியோக்களில் பேசி வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். அதுபோக மக்களே, பழைய பாடல்கள், வசனங்களைக் கரோனாவுக்கு ஏற்றபடி கட் செய்து ஷேர் செய்கின்றனர். அந்த வகையில் எப்பொழுதும் போல வடிவேலு மீம்ஸ்கள் பல வளம் வரும் வேளையில் மன்சூர் அலிகான் - சில்க் ஸ்மிதா ஆடும் பாடல் ஒன்றும் வாட்ஸ்-அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வளம் வருகிறது. 'தெய்வக்குழந்தை' என்ற படத்தில் சில்க்குடன் மன்சூர் அலிகான் குதூகலமாக ஆட்டம் போடும் அந்தப் பாடலை போட்டு, 'வீட்டிலேயே இருந்தாலும் தனித்து இருக்கவேண்டும், இதுபோல ஆட்டம் போட்டால் வேறு விளைவுகள் வரும்' என்று அர்த்தம் சொல்லும் வசனத்துடன் இருக்கிறது அந்த வீடியோ. மன்சூர் அலிகான், தானே பேட்டிகளின் மூலமும் வீடியோக்கள் மூலமும் மக்களிடம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.