மன்னார்குடியில் மூத்த பத்திரிக்கையாளர் நேதாஜி காலமானார், அவரது உடலுக்கு பத்திரிக்கை யாளர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ஜி. நேதாஜி. இவர் மன்னார்குடியில் கடந்த 45 ஆண்டுகளாக செய்தியாளராகவும், சமுக செயல்பாட்டாளராகவும் பணியாற்றி வந்தார். தொடக்க காலத்தில் தினகரன் நாளிதழில் நிருபராகவும் அதனைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இதுதவிர மாலை மலர் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுமையும் செய்தி பணியாற்றிய இவர், மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் எதுவானாலும் தாமாக முன்வந்து அதுகுறித்தான செய்தி வெளியிட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் கண்டுள்ளார்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நற்பணி மன்றத்தை மன்னார்குடி பகுதியில் தொடங்கி பல்வேறு சமூக பணியாற்றியுள்ளார். 43 ஆண்டு காலம் தினத்தந்தி பத்திரிகையிலேயே பணியாற்றிய இவர் அப்பத்திரிகையின் நிறுவனர் ஆதித்தனாரின் நினைவு தினமான நேற்று 24ம் தேதி இரவு மாரடைப்பால் காலமானார்.
இவரது இறுதி நிகழ்ச்சிகள் மன்னார்குடி மூர்க்க விநாயகர் கோவில் தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெற உள்ளது. இறுதி நிகழ்ச்சிகளை குடும்பத்தாருடன் இணைந்து மன்னார்குடி பத்திரிக்கையாளர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.