ஜனவரி 19 ஆம் தேதி லயோலா கல்லூரி அருகிலுள்ள அய்க்கப் இல்லத்தில், ‘மணிப்பூர்- எரியும் மண்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நக்கீரன் இதழில், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முகாமில் சென்று பார்வையிட்டவரான கிருத்திகா தரண், தனது நேரடி அனுபவங்களை செய்திகளின் பின்னணியில் குறுந்தொடராக எழுதியிருந்தார். அது நக்கீரன் பதிப்பகத்தால் புத்தகமாக உருப்பெற்ற நிலையில், அதன் புத்தக வெளியீட்டு விழா நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடைபெற்றது.
இனாமுல் ஹசன் வரவேற்புரையாற்ற, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளருமான சசிகாந்த் செந்தில் வெளியிட ஜெய்ஜென் பெற்றுக்கொண்டார். விழாவில் அருட்பணியாளர் பார்த்தசாரதி, எழுத்தாளர் இக்பால் அகமது சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நூல் குறித்து உரையாற்றினர்.
சசிகாந்த் செந்தில் பேசும்போது, “அரசு அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்.களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் நேர்மையானவர், ஊழல் செய்யாதவர் என்பார்கள். அப்படி எத்தனையோ அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் அதுமட்டும் போதாது. அதிகாரிகள் தைரியமானவர்களாகவும் இருக்க வேண்டும். அதுதான் தேவை. அந்த வகையில் கிருத்திகா தைரியமானவர். செயலாற்றுபவர். அதனால்தான் அவர் மணிப்பூர் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று, அதை எழுத்திலும் பதிவு செய்திருக்கிறார். இத்தகையவர்கள்தான் நிறைய பேர் தேவை” எனக் குறிப்பிட்டார்.