Skip to main content

போலீசார் கல்லால் அடித்தே கொன்றார்கள்: தூத்துக்குடியில் ம. உ. ஆணையத்தினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

Published on 02/06/2018 | Edited on 02/06/2018


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மீது போலீசார் நடித்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்கள் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. அதனை மறுபடியும் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 30ம் தேதி அன்று ஆணையிட்டது.

அதன்படி, ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அம்பிகா பிரசாத், மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்பு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட அந்த 7 பேரின் உடல்களில் சண்மூகம், கந்தையா, கார்த்திக், காளியப்பன், செல்வசேகர் ஆகிய 5 பேரின் உடல்கள் இன்று காலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களின் ஒவ்வொருவரின் உடல்களும் ஒரு தாசில்தார் தலைமையில் உடன் போலீஸ் ஏடிஎஸ்பி மற்றும் போலீஸ் படையை கொண்ட பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் குறுக்குச்சாலையை சேர்ந்த தமிழரசன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். பின்னர் அவரது உறவினர்களுடன் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, இன்று அவரது உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். இருப்பினும் அவரது உடலை ஒப்படைக்க அவரது உறவினருடன் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே மீதமுள்ள 6 உடல்கள் இன்னும் உடற்கூறாய்வு செய்யாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதே பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இன்று மாநில மனித உரிமை ஆணையத்தினர் ஜெயசந்திரன், சித்ரன்ஜன் மோகன்தாஸ் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி வந்தனர். அங்கு அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். அவர்களிடம் நடந்ததை விளக்கிய கலெக்டர், கலவரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமாக்கப்பட்டது குறித்தும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டது குறித்தும் காட்டினார்.

அதன் பின்பு மதியம் 1 மணி அளவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தினர் விசாரணை செய்தனர். நாங்கள் அமைதியாக பேரணியாக சென்றோம். 3வது மைல் சென்றவுடன் போலீசார் எங்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் எங்களை அடித்து விரட்டினர். கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது துப்பாக்கியால் சுட்டனர். இன்னொரு பக்கம் போலீசார் கல்லால் அடித்தே சிலரை கொன்றார்கள் என்றும் தெரிவித்தனர். மற்றொரு தரப்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது என் பக்கத்தில் வந்தவர் குண்டு காயம்பட்டு கீழே விழுந்தார்.

அவரை நான் தூக்க சென்ற போது என் காலின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று கிளிண்டன் என்பவர் கூறினார். அங்கிருந்த சிலர் எங்கள் மீது வழக்கும் போட்டிருக்கிறார்கள் என்று சொன்ன போது, அது ஒன்றும் ஆகாது அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று மனித உரிமைகள் ஆணையர்கள் அவர்களிடம் ஆறுதலாக சொன்னார்கள். இன்னும் பலரை விசாரிப்பதற்காக மனித உரிமை அங்கையே உள்ளனர்.

சார்ந்த செய்திகள்