மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் காவல்துறையினரின் தடையை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் செய்வதற்கு நடை மேடைக்கு வந்தனர். இவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 30க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். இதில் கட்சியின் வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மணிவாசகம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் வி.எம். சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.