கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.
தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.
திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.