காட்டுமன்னார்கோயில் அருகே
முறைகேடாக செயல்படும் மணல்குவாரி!
காட்டுமன்னார்கோயில் அருகே சி.அரசூரில் அரசின் மணல் குவாரி இயங்கி வருகிறது. இதில் ஆளும் கட்சியினரின் துண்டுதல்களால் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது என்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் ஒன்றாக திரண்டு மணல் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் குவாரியில் அரசின் விதிக்கு மாறாக அதிகமான ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் மணல்குவாரி அதிகாரிகள் துணையுடன் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் மணல் எடுத்துள்ளனர். குவாரிக்கு வரும் லாரி ஒன்று ஓட்டுனர்களிடம் ஆளும் கட்சியினர் ரூ 500 பணம் வசூல் செய்து கொண்டு குவாரிக்கு உள்ளே லாரிகளை அனுதிக்கிறார்கள். இது மணல்குவாரி போல் இல்லை அளும் கட்சியினரின் அலுவலகம் போல் உள்ளது. மேலும் வெளியூரில் இருந்து வரும் ஓட்டுனர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அதனை உடனடியாக சரிசெய்யவேண்டும். முறைகேடாக மணல் அள்ளுவதால் சுற்றுவட்டபகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீரில் உப்பு நீர் கலந்து வருகிறது. மேலும் அனுமதித்த நேரத்தை விட இரவு பகல் பாரால் மணல்குவாரி இயங்கி வறுகிறது. இதனையும் முறைபடுத்தவேண்டும் என்றார்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் தெரியாது என்கிறார்கள். வரும் 16ஆம் தேதிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று சம்பந்தபட்ட பொதுபணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கூறியுள்ளனர். சரிசெய்யவில்லையென்றால் அன்றைய தினமே இப்பகுதி பொதுமக்களை ஒருங்கிணைத்து மணல்குவாரியை மூடுவாதற்கான தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
- காளிதாஸ்