Skip to main content

கணவன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த மனைவி

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

The man who cheated on many women has been arrested

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கிழுமத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மகன் பால்ராஜ்(30). இவருக்கு திருமணமாகி  பூவழகி(22) என்ற மனைவி உள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி தனது கணவர் பால்ராசு மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி எனக்கும் பால்ராசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனது பெற்றோர் பால்ராசுக்கு 3 பவுன் செயின் இரண்டரை பவுன் மோதிரம் என ஐந்தரை பவுன் சீர்வரிசை செய்தனர். மேலும் அவருக்கு பத்து பவுன் நகையும் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் தருவதாக தெரிவித்து இருந்தனர்.

 

இந்த நிலையில் திருமணம் ஆனதிலிருந்து எனது கணவர் செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த போட்டோக்களை பார்த்தேன். இதுகுறித்து அவரிடம் இந்தப் பெண்கள் யார் என்று கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நகை, பணத்திற்காக பல பெண்களிடம் என் பெயரை மாற்றி சொல்லி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்தி வருகிறேன். இதையெல்லாம் நீ கண்டு கொள்ளக்கூடாது உன்னை நான் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் நடந்த இரண்டு மாதங்கள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய நிலையில் திடீரென ஒருநாள் என் பெற்றோர் வீட்டில் என்னை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றார். பின்னர் எனது பெற்றோரிடம் உங்கள் மகள் என்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால் வரதட்சணையாக மூன்று லட்சம் பணம், பத்து பவுன் நகையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டு எனக்கு தகவல் கொடுங்கள் என கூறினார்.

 

அதன் பின்னர் உங்கள் மகளை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார. அதன்பிறகு அவரது செல்போன் எண்களுக்கு போன் செய்யும் போதெல்லாம் சென்னையில் வேலை பார்க்கிறேன் பணத்தையும், நகையையும் வரதட்சணையாக கொடுப்பதாக இருந்தால் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று பதில்கூறி வந்தார். இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டு போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னிடம் உனது கணவர் ஏற்கனவே மைனர் பெண் ஒருவருடன் திருமணம் செய்வதாக கூறி தகாத உறவு வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்காக தேடிக் கொண்டிருப்பதாக  தெரிவித்தனர். இதையடுத்து சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பால்ராசுவுடன் எனக்கு திருமணமாகி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார்.

 

இப்படி நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையோடு விளையாடி மோசடி செய்ததோடு என்னுடைய வாழ்க்கையும் சீரழித்து விட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பூவழகி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராசுவை தேடிவந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை சென்று பால்ராசை நேற்று (25.12.2021) கைது செய்து பெரம்பலூர் கொண்டு வந்துள்ளனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். அவர்களிடம் எவ்வளவு நகை பணம் பறித்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை பணம் பறித்த பால்ராஜ் குறித்த செய்தி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்