திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
திருவாரூர் அருகே புளிச்சகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு ரசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள். அவர்களில் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகின்றனர். கடைசி மகன் சுதையரசன் மட்டும் அவர்களுடன் வீட்டில் இருக்கின்றார். அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் வடிவேலுக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் முரளி என்பவரது குடும்பத்தாருக்கும் வேலி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 15 ஆம் தேதி முரளி குடும்பத்தினர் வடிவேலுவை தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், அவரது மனைவியைச் சரமாரியாகக் கட்டையால் தாக்கியதோடு உடல் நலமில்லாத அவர்களது கடைசி மகனையும் தாக்கியுள்ளனர்.
இந்தச் சூழலில் வடிவேலு குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது சம்பந்தமாக குடவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வழக்குப் பதிவு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தாக்குதலில் ஈடுபட்ட முரளி குடும்பத்தினரைக் கைது செய்யவில்லை என்றும் குடவாசல் காவல்துறையினர் முரளி குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர் வடிவேலு குடும்பத்தினர். மேலும், தங்களைத் தாக்கிய முரளி குடும்பத்தினர் மீதும், முரளி குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்படும் குடவாசல் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள் திடீரென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வாகனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை உடனடியாக மீட்ட காவல்துறையினர், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.