கடலூர் அருகே வங்கிக்கு வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களை முதியவர் ஒருவர் திருடும் காட்சி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் வங்கிக்கு, வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது வாடிக்கையாக நடந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மதியம் அந்த வங்கிக்கு முன்பு நீண்ட வரிசையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது முதியவர் ஒருவர், அங்கு இருந்த இரண்டு வாகனங்களைக் கள்ளச்சாவி போட்டுத் திருட முயற்சி செய்துள்ளார். ஆனால், முயற்சி பலனளிக்காததால் மூன்றாவதாக நின்றிருந்த ஒரு டூவீலரில் கள்ளச்சாவி போட்டு எந்த ஒரு பதற்றம் படபடப்பு பரபரப்பு இல்லாமல் சாவகாசமாக அந்த வண்டியைத் திருடிச் சென்றுள்ளார்.
அந்த வாகனம் அந்த வங்கியில் பணி செய்யும் அலுவலர் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. பொதுவாக பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் டூவீலர்களை இளைஞர்கள் திருடிச் செல்வார்கள். ஆனால் முதியவர் இப்படி சாவகாசமாகக் கள்ளச்சாவி போட்டு டூவீலரை எடுத்துச் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்தக் காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.