கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள இளவனாசூர் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் நேற்று இரு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் திருமலை(14), நம்பி குளம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் மணிகண்டன்(14) இருவருக்கும் வகுப்பறையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஜாமென்ட்ரி பாக்ஸில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து திருமலையின் வயிற்றில் குத்திக் கிழித்துள்ளார். இதில் திருமலை பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதைப் பார்த்த, அங்கிருந்த ஆசிரியர்கள் திருமலையை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இளவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில் சக மாணவன் மற்றொரு மாணவனை கத்தரிக்கோலால் குத்திக் கிழித்த சம்பவம் இளவனாசூர் கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி படிக்கும் மாணவர்கள் இடையே இவ்வளவு விரோத மனப்பான்மை எப்படி ஏற்பட்டது. இதுபோன்ற பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு அவ்வப்போது கவுன்சிலிங் கொடுக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை இந்தப் பள்ளியில் நடத்தினார்களா, என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.