Skip to main content

விமான சாகச நிகழ்ச்சி; மயக்கமடைந்த நபர் உயிரிழப்பு!

Published on 06/10/2024 | Edited on 06/10/2024
Man faint incident in flight adventure program

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (06.10.2024) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன.

இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களை கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி, லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகத்திலேயே அதிக பார்வையாளர்களுடன் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி என்று உலக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பார்வையாளர்களில் 30க்கும் மேற்பட்டோர்  வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கவந்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்