கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சுந்தரம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், ராஜாராமன் மற்றும் போலீசார், கும்பகோணம் விக்கிரவாண்டி சாலையில் சேத்தியாதோப்பு அருகிலுள்ள பூதங்குடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள தண்டக்காரன் குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ்(19) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிதம்பரம் அருகில் உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சேத்தியாதோப்பு கடைவீதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்திருந்தார். அப்போது அந்த மையத்தில் நின்றிருந்த விக்னேஷ், ராஜேந்திரனுக்கு பணம் எடுத்து கொடுத்து உதவி செய்வதுபோல் நடித்து அவரது கார்டு ஏடிஎம்-ல் வேலை செய்யவில்லை என்று திருப்பிக் கொடுக்கும்போது போலி கார்டை கொடுத்துவிட்டு ராஜேந்திரன் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்து சுமார் 34 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.
இது குறித்து அப்போது ராஜேந்திரன், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ராஜேந்திரனுக்குச் சொந்தமான சுமார் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதை தற்போது விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார் விக்னேஷ். அதையடுத்து விக்னேஷிடம் இருந்த 12,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.