செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுலா வந்திருந்த போது சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட ஒருவர் அடுத்த சில மணி நேரங்களிலேயே சாலை விபத்து ஒன்றில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுலாவிற்காக மாமல்லபுரம் வந்திருந்த போது அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக மாமல்லபுரம் வென்புருஷம் காமராஜர் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவர் செயல்பட்டார். கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை கல், ஐந்து ரதம் உள்ளிட்ட பல இடங்களைச் சுற்றிக் காட்டி அதற்கான விளக்கத்தை இந்தி மொழியில் சிறப்பாக அளித்தார். பாலகிருஷ்ணன் சிறப்பாக இந்தியில் பேசி விரிவாக எடுத்துக் கூறியதைக் கண்டு ஆச்சரியமடைந்த ராம்நாத் கோவிந்த் அவரை வெகுவாகப் பாராட்டினார்.
பின்னர் இரவு ஏழு மணியளவில் மாமல்லபுரத்தில் இருந்து தனது வீட்டுக்குச் செல்லும்போது, சாலையின் குறுக்கே வந்த பன்றி பாலகிருஷ்ணன் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.