முறைகேடாகத் தேர்வு எழுதியவர்களையெல்லாம் ‘பாஸ்’ பண்ண வைத்துவிட்டு, பொதுவெளியில் ‘பெயில்’ ஆகி தலைகுனிந்து நிற்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
தனியார் நிறுவனங்கள் தருவதைக் காட்டிலும், அரசுப்பணி என்றால் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் மட்டுமல்ல, கூடவே ‘கிம்பளமும்’ சில துறைகளில் கொட்டும் என்ற காரணத்தினாலேயே, வளமான வாழ்க்கை என்ற கனவோடு டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளைப் பலரும் எழுதிவருகின்றனர். இதுவே பேராசையாகி, தகுதியில்லாதவர்கள் ‘எப்படியாவது’ குரூப் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
குரூப் தேர்வுகளில் ஏற்கனவே முறைகேடு செய்து தேர்வாகி, அரசுப் பணி இருக்கைகளில் சொகுசாக அமர்ந்துவிட்ட ரமேஷ், திருக்குமரன் போன்றவர்கள், பழைய அனுபவத்தை மூலதனமாக்கி, இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, சைடு வருமானம் அதிகமாகவே பார்த்திருக்கின்றனர். இவர்களோடு, குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்து வெற்றிபெற்ற நிதிஷ்குமாரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது அரசுப் பணியாளர் தேர்வாணையம். 2006-2011 திமுக ஆட்சி காலம். அப்போது டி.என்.பி.எஸ்.சி. தலைவராகப் பதவி வகித்தார் அந்த செல்லமுத்து. அந்தக் காலக்கட்டத்தில், குரூப்-1, மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆனால், நடவடிக்கை எதுவும் பெரிதாக எடுக்கப்படவில்லை. ஆனாலும், 2011-ல் டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் செல்லமுத்து மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், இடைத்தரகர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். செல்லமுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட, விவகாரம் அத்தோடு அடங்கிப்போனது.
அந்தச் சூழ்நிலையில், நமது நண்பர் ஒருவருக்கு செல்லமுத்துவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘பணம் கொடுத்தால் போஸ்டிங் போடுவார்கள் என்கிற பொதுவான பேச்சு உண்மையா சார்?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “நான் யோக்கியனாக இருக்கவே விரும்புகிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்களும் அப்படி இருப்பார்கள் என்று நான் நம்புவது முட்டாள்தனம்.” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.
2010-ல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீசைக்கார அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர், அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞரைச் சந்தித்து, ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். ‘தொகுதி வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை பணிகளைச் செயல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன்.’ என்று அப்போது அவர் காரணம் சொன்னாலும், தனது மகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் போஸ்டிங் போட வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை என்று அப்போதே சர்ச்சையானது.
அதிமுகவோ, திமுகவோ, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளில் ஈடுபடுவோர், தங்களின் ஆட்டத்தை நிறுத்துவதே இல்லை.